சமீபத்தில் ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசுக்கு அதிக நிதி அளித்து குறைவாகப் பெற்றுக்கொள்கின்றன என்பது தொடர்பான விவாதம் நடந்தது.
பொருளாதாரம் தொடர்பான விவாதம் இது. ஆனால் ‘‘இதைப் பேசுகிறவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். காங்கிரஸ் தான் இப்படித் தூண்டிவிடுகிறது,‘‘ என்று பேசிக்கொண்டிருந்த பாஜக செய்திதொடர்பாளர் நரேன் தனேஜா, ‘‘இந்திய மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். தென்னிந்தியாவை சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி இறந்தபோது தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள்தான் அதிகம் கண்ணீர் விட்டார்கள்,‘‘ என்று ஒரே போடாகப் போட்டார்.
பிரச்னை ஸ்ரீதேவி அல்ல. தற்போது செயல்படும் என்பி சிங் தலைமையிலான 15வது நிதி கமிஷன் மாநிலங்களுக்கு 2020முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிதிப்பகிர்வு செய்வதை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி பரிந்துரை செய்ய இருக்கிறது. ஏற்கெனவே முந்தைய கமிஷன் வரை 1971 - ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டை வைத்து செய்துகொண்டிருந்தார்கள். இன்றைய நிலையில் இதனால் தென்னிந்திய மாநிலங்கள்தான் பாதிக்கப்படும் என்பது முக்கியமான வாதம். ஏனெனில் திறம்பட்ட நிர்வாகம், கல்வி அறிவு ஆகியவற்றின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்து அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன தென்னிந்திய மாநிலங்கள். ஆனால் வட இந்திய மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் அப்படி இல்லை. 1951&ல் பிஹார், தமிழ்நாடு இருமாநிலங்களின் மக்கள் தொகையும் ஏறக்குறைய சமம். ஆனால் இன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பிஹாரின் மக்கள்தொகையோ மூன்று மடங்காக உள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இதனால் சிறப்பாக செயல்பட்டு மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாட்டுக்கு ஊக்கம் தருவதைவிட்டு விட்டு தண்டிப்பதுபோல் நிதி ஒதுக்கீட்டில் கைவைக்கும் விதத்தில் 15வது நிதிக் கமிஷன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இது தொடர்பாக திமுக செயல்தலைவர் பத்து மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால் இப்பிரச்னை பெரிய அளவில் நாடு முழுவதும் பேசப்படுவதற்குக் காரணம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் நிதி ஒதுக்கீடு பற்றி பிரச்னையைக் கிளப்பியதே. ஆந்திரா என்ற புதிய மாநில கட்டமைப்புக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சிறப்பு நிதியைத் தராததைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுடன் தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து நாயுடு விலகினார். சித்தராமைய்யா,‘‘கன்னடர்கள் நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் மத்திய அரசுக்கு அளிக்கும் நிதியில் இருந்து திரும்பப் பெறுவது மிகக்குறைவே. அதாவது ஒரு ரூபாய் அளித்தால் 47 பைசாதான் திரும்பி வருகிறது,‘‘ என்றார். கேரளாவுக்கு அவர்க்ள் அளிக்கும் ஒரு ரூபாயில் இருந்து 25 பைசாதான் வருகிறது. ஆந்திரபிரதேசம் அளிக்கும் ஒரு ரூபாயில் திரும்பப்பெறுவது 67 பைசா. தமிழ்நாட்டின் கதையும் இதேதான். நாம் ஒரு ரூபாய் அளித்தால் திரும்பிப் பெறுவது 40 பைசாவே.
ஆனால் உத்தரபிரதேசம் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு 1.8 ரூபாய் பெறுகிறது. பிஹார் ஒரு ரூபாய் அளித்துவிட்டு 96 பைசா பெறுகிறது! மத்திய பிரதேசம் ஒரு ரூபாய் அளித்து 75 பைசா திரும்பப்பெறுகிறது!
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவை சேர்ந்து நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம். அவை நாட்டின் வரி வருவாயில் 30 சதவீதத்தை அளிக்கின்றன. நாட்டின் மொத்த ஜிடிபியில் கால் பங்கு அளிப்பதும் இவையே. ஆனால் அவை திரும்பப் பெறுவதோ 18 சதவீதமே. இந்த குரல் சில ஆண்டுகளாகவே கேட்டுக்கொண்டிருந்தது. இப்போது வலுவாகக் கேட்க ஆரம்பித்துள்ளது.
இந்தியா விடுதலை பெற்றதில் இருந்தே இக்குரலுக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்பது அறிஞர் அண்ணா அவர்களின் முழக்கம். நாடு விடுதலை பெற்றபோது ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் வட இந்தியாவில் மட்டுமே நிறுவப்பட்டபோது அவை தென்னிந்தியாவிலும் நிறுவப்படவேண்டும் என்று மத்திய அரசை நிர்ப்பந்திக்க இந்த எதிர்ப்பு உதவிற்று. அத்துடன் திகவும் திமுகவும் திராவிட நாடு என்கிற தனி நாடாக பிரிந்து செல்லும் உரிமையை வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்கும் வழியாக முன்வைத்திருந்தன. ஆனால் திராவிட நாடு என்கிற கோரிக்கையை 1962ல் சீனப்போரை ஒட்டி அண்ணா கைவிட்டார். அதற்கு அடுத்த ஆண்டே பிரிந்துசெல்லும் உரிமைகோரல் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. ‘‘நாங்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்கிற அண்ணாதுரையின் கருத்து காலம் தோறும் திராவிட இயக்கத்தினரால் சொல்லப்படுவதுண்டு. இந்த விஷயத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க முயற்சியும் 1984&ல் எடுக்கப்பட்டது. இந்திரா மறைவுக்குப் பின் ஏராளமான பெரும்பான்மையுடன் ராஜிவ்காந்தி பிரதமர் ஆகியிருந்தார். அப்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அபூர்வமாக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒரே நேரத்தில் ஆட்சியில் இருந்தன. அவற்றின் முதல்வர்களான ராமகிருஷ்ண ஹெக்டே(ஜனதா), எம்ஜிஆர்(அதிமுக), ராமராவ்(தெலுங்கு தேசம்), ஈகே நாயனார்( இடதுசாரி) ஆகிய தென்னிந்திய மாநில முதல்வர்கள் நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து குரல்கொடுத்தனர். ஆனால் அதன்பிறகு கடந்த 34 ஆண்டுகளாக இது தொடர்பாக எதுவும் நடக்கவில்லை. ஆந்திர மாநிலம் புதிதாக அமைந்த நிலையில் சந்திரபாபு நாயுடு குரல் கொடுத்த நிலையில் தென்னிந்திய மாநிலங்கள் இந்த விஷயத்தில் ஒரே குரலில் பேசும் நிலை இப்போது உருவாகி உள்ளது.
சுமார் கால் நூற்றாண்டாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுகளில் மாநிலக்கட்சிகள் பங்கெடுத்துவருகிற சூழலால் இந்தக் குரல் எழாமல் இருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது திமுக தலைவர் கருணாநிதி, ‘‘திமுக இப்போது தேசியக் கட்சியாக உள்ளது,'' என்று பெருமையுடன் குறிப்பிட்ட காலமும் உண்டு.
இது வரலாற்றுப் பின்புலம் உடைய சிக்கலான பிரச்னையே. மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பிரச்னை மேலும் வலுவாகிறது. அதிகம் வருவாய் ஈட்டித்தரும் மாநிலம் தன் சிறப்புத் தேவைக்காக கூடுதலாக நிதி கேட்கும்போது மத்திய அரசு மறுக்கும்நிலையை யோசித்துப்பாருங்கள். ஒக்கி புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் போன்றவற்றுக்கு நாம் மத்திய அரசிடம் தான் கையேந்த வேண்டி உள்ளது. கேட்ட நிதி கிடைக்காதபோது இந்த குரல் எழத்தான் செய்யும்!. ஆனால் வெறும் வருவாய் தொடர்பான பிரச்னை மட்டும் அல்ல இது. இன்று தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்கு இங்கே வந்து அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை பார்க்கும் வட இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பும் ஒரு காரணியாக அமைவதையும் பார்க்கவேண்டி உள்ளது.
இப்போதைக்கு இந்த பிரச்னைகள் அவ்வப்போதைய பிரச்னை அடிப்படையில் தீர்க்கப்படுவதே நல்லது. அதே சமயம் மத்தியில் அமையும் அரசுகள் மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பிடுங்குவதையும் நிறுத்திக் கொள்வது இப்பிரச்னைக்கு தீர்வாக அமையக்கூடும்!
ஏப்ரல், 2018.